சிங்கப்பூரில் வசிக்கும் சுமார் 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் லீ சியான் லூங் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கெளரவமான முறையில் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
தொழிலாளர்களுக்குரிய நியாயமான ஊதியம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பு சட்டப்பூர்வ மாக உறுதி செய்யப்பட வேண்டும். வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதில் சிங்கப்பூர் அரசு அக்கறை கொண்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அரசு சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் மூன்று ஆண்டுகளில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்டப்படும். இதன்மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்று பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிங்கப்பூர் வெளியுறவு- சட்ட அமைச்சர் கே. சண்முகம் பார்வையிட்டு அங்கு தங்கியுள்ள இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“கலவரத்தால் தங்களின் பணி ஒப்பந்தம் ரத்தாகும் என்று யாரும் அச்சப்பட வேண்டாம், சட்ட விதிகளுக்கு உள்பட்டு தொழிலாளர்கள் நடக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அமைதி திரும்பியது
“லிட்டில் இந்தியா பகுதி இப்போது மிகவும் அமைதியாக உள்ளது. சிறு அசம்பாவிதங்கள்கூட ஏற்படவில்லை. இந்தியத் தொழிலா ளர்கள் ஆங்காங்கே உள்ள மைதா னங்களில் கிரிக்கெட் விளையாடி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைக் கொண்டாடினர். சந்தைகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது” என்று போலீஸார் தெரிவித்தனர்.
கோரிக்கை ஏற்பு
சிங்கப்பூர் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் இந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ள னர். குறிப்பாக தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் பணி யாற்றுகின்றனர்.
கடந்த 8-ம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் குமாரவேலு என்ற தமிழர் பஸ் விபத்தில் உயிரிழந்தார். பஸ்ஸில் ஏற முயன்றபோது கீழே தள்ளிவிடப்பட்டதில் அவர் உயிரிழந்ததாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். அதனை மறுத்துள்ள சிங்கப்பூர் அரசு, குடிபோதையில் அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. சுமார்
400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டு, விபத்துக்கு காரணமான பஸ், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
அனைவரும் போதையில் இருந்ததாக சிங்கப்பூர் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸா ரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சமூக ஆர்வலர்கள், கலவரத்தில் ஈடுபட்ட 400 பேரும் போதையில் இருந்தார்கள் என்பதை ஏற்க முடியாது.
வெளி நாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம், பணி நேரம், வாழ்விடம் ஆகியவற்றில் சிங்கப்பூர் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படாது என்று அவர்கள் யோசனை தெரிவித்திருந்தனர்.