அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் தாலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டது குறித்த பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரித்து சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ இது பற்றி கூறியபோது, “பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் முழுவீச்சுடன் செயல்பட்டு வரும்போது, அந்நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமையை சர்வதேச நாடுகள் மதிக்கப் பழக வேண்டும். மேலும் ஆப்கனில் அமைதிக்காக பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சர்வதேச சமூகம் இதனை அங்கீகரித்து பாகிஸ்தானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.
பலுசிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிராக அமெரிக்க தாக்குதல்கள் நடைபெறுகிறது என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.
மே மாதம் 21-ம் தேதி பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நோஷ்கி மாவட்டத்தில் அமெரிக்க தாக்குதலில் தாலிபான் தலைவர் மன்சூர் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் முகமது ஆஸாம் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தங்கள் ஆதரவை சீனா வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.