அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் நைனா துவுலுரி ஒரு தீவிரவாதி என்று சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துவிலுரி, “இனவெறியற்ற அமெரிக்காவின் பன்முகத்தன்மைக்குக் கிடைத்த வெற்றி” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அழகி பட்டம் வென்ற துவுலுரி கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், இனவெறியைத் தூண்டும் வகையில் சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, துவுலுரி அரபு நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி என்றும், அவருக்கு அல் காய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீ தீவிரவாதியைப் போல் உள்ளாய். நியூயார்க்கை விட்டு வெளியேறு” என ஒருவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் உலக வர்த்தக மைய தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட 4 நாள்களில் துவுலுரி அழகி பட்டம் வென்றிருப்பதாக லூக் பிரசிலி என்பவர் கூறியுள்ளார்.
“அல்-காய்தாவுக்கு வாழ்த்துகள். உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என ஒருவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த விமர்சனங்களை தாம் பொருட்படுத்தப் போவதில்லை எனவும், தான் ஒரு அமெரிக்கர் எனவும் துவுலுரி கூறியுள்ளார்.
துவுலுரிக்கு எதிராக சமூக வலைத் தலங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு பெண்களுக்கான ஜசபெல் வலைத்தளத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துவுலுரி வெள்ளை இனத்தவர் இல்லை என்பதால் இனவெறியர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்ததி உள்ளனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே “அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் நம்மில் ஒருவர். வெள்ளை இன அமெரிக்கர்கள் அவரை வெறுக்க வேண்டாம்” என எம்மா சிட்னி கூறியுள்ளார்.