உலகம்

இந்திய தொழிலதிபர் மிட்டலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் முதலீடு செய்ததன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கியதற்காக பிரிட்டன் வாழ் இந்தியரும் ஸ்டீல் தொழில் ஜாம்பவானுமான லட்சுமி மிட்டலுக்கு அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் உள்ள மிட்டலுக்கு சொந்தமான ஆர்சிலர் மிட்டல் கிளீவ்லேண்ட் ஸ்டீல் தொழிற்சாலையை வியாழக்கிழமை பார்வையிட்டார் ஒபாமா.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒபாமா பேசுகையில், "கிளீவ்லேண்ட் உள்பட அமெரிக்காவில் முதலீடு செய்ததற்காக ஆர்சிலர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லட்சுமி மிட்டலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

"கிளீவ்லேண்ட் தொழிற்சாலையில் தயாராகும் ஸ்டீல் மிகவும் வலிமையானது. இதுபோன்ற தரமான ஸ்டீலை உலகில் வேறு எங்கும் காண முடியாது. இந்த ஆலை உலகிலேயே மிகவும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஆலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மிகவும் திறமையானவர்கள்" என்றார் ஒபாமா.

கடந்த 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், ஆர்சிலர் நிறுவனம் இயங்கியதை ஒபாமா வெகுவாக பாராட்டினார்.

ஆர்சிலர் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 70 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.440 கோடி) முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் ஏராளமான புதிய வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதுகுறித்து மிட்டல் தனது வரவேற்புரையில் கூறுகையில், "அதிபர் ஒபாமா நம்முடைய தொழிற்சாலைக்கு வருகை தந்தது நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். கிளீவ்லேண்டில் 100 ஆண்டுகளுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்வோம்" என்றார்.

"ஒபாமா இங்கு வந்ததன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தில் உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஜிடிபி வளர்ச்சியைவிட உற்பத்தித் துறை வளர்ச்சி வலிமையாக உள்ளது" என்றார் மிட்டல்.

SCROLL FOR NEXT