உலகம்

உலக மசாலா: தனியாளாகச் சாலை போட்ட ஜாங்குக்கு வணக்கம்!

செய்திப்பிரிவு

சீனாவின் சோன்க்விங் பகுதியில் உள்ள மலைக் கிராமத்தில் வசிக்கிறார் 76 வயது ஜாங் ஜிவென். கேட்கும் சக்தியை இழந்துவிட்ட நிலையிலும் கடந்த 5 ஆண்டுகளாகச் சாலை போடும் பணியைத் தனியாளாக மேற்கொண்டு வந்தார். இவரது கிராமத்தைத் தவிர மற்ற கிராமங்களுக்குச் சாலை வசதி இருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை வசதி இல்லாமல் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி வந்தனர். ஓய்வு பெற்றவுடன் சாலை போடும் பணியை ஆரம்பித்துவிட்டார் ஜாங். ஊர் மக்களும் இவரது மனைவியும் தனி நபரால் செய்யக்கூடிய காரியம் இல்லை என்று சொல்லிப் பார்த்தார்கள். எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தானே பாதையில் இருக்கும் மரங்களையும் புதர்களையும் அப்புறப்படுத்தினார். சாலையைச் செப்பனிட்டார். பாழடைந்த வீடுகளில் இருந்து கற்களையும் மரங்களையும் எடுத்து, சாலைக்குப் பயன்படுத்திக்கொண்டார். தன் சேமிப்பு முழுவதையும் செலவிட்டார். செங்குத்தான பகுதிகளில் பாறைகளைப் படிகளாக மாற்றினார். சிறிய ஓடைகளைக் கடக்க, மரப்பாலங்களை அமைத்தார். வயதானவர்கள் நடந்து செல்லும்போது இளைப்பாறுவதற்குப் பாறைகளால் இருக்கைகளைச் செய்து வைத்தார். மழைக் காலங்களில் ஒதுங்குவதற்கு குடில்களை உருவாக்கினார். ஐந்தாண்டு கடின உழைப்பின் பலனாக இன்று கிராம மக்களுக்கு நல்ல சாலை வசதி கிடைத்துவிட்டது. “பள்ளி செல்லும் குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை சாலை வசதி இல்லாமல் எவ்வளவு தவிக்கிறார்கள், நம் வாழ்நாளுக்குள் அடுத்தவர்களுக்கு உதவுகிற மாதிரி ஏதாவது செய்யணும் என்று அவர் சொன்ன பிறகு சம்மதித்தேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். சாலை வசதி வந்தவுடன் எங்கள் கிராமத்துக்குப் பக்கத்திலேயே பேருந்து வர ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவருக்குத்தான் எதுவும் காதில் விழுவதில்லை. இந்த வேலை முடிந்தும் இவர் ஓய்வெடுக்கவில்லை. கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்” என்கிறார் மனைவி வாங் லேனிங்.

தனியாளாகச் சாலை போட்ட ஜாங்குக்கு வணக்கம்!

தாய்லாந்தில் தேங்காய் க்ரீம் புட்டிங் மிகவும் பிரபலமான இனிப்புப் பண்டம். பாங்காக்கில் உள்ள பதுன் தானி என்ற கடையில், நாய்க்குட்டி உருவத்தில் தேங்காய் புட்டிங் விற்பனை செய்யப்படுகிறது. நிஜ நாய்க்குட்டிகள் போலவே அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் புட்டிங், ஒரே நேரத்தில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. ஆர்வத்துடன் புட்டிங்கை வாங்கி, புகைப்படங்கள் எடுத்த பிறகே சாப்பிடுகிறார்கள். ஆனால் சிலர் புட்டிங்கைப் பார்த்தவுடனே சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுகிறார்கள். “என்ன தான் புட்டிங்காக இருந்தாலும் இதை வெட்டிச் சாப்பிட மனம் வரவில்லை” என்கிறார் போ. ஆனால் கடையின் உரிமையாளர் வீலைவான் மீ, “இந்த எதிர்ப்புதான் எங்களை மிகவும் பிரபலப்படுத்தியிருக்கிறது. ஆர்டர்கள் குவிகின்றன” என்கிறார். ஒரு சிறிய துண்டு நாய்க்குட்டி புட்டிங் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்ச்சைகளில் பிரபலமாவது ஃபேஷன் போலிருக்கு…

SCROLL FOR NEXT