7 ஆண்டுகளுக்குப் பின் நேற்று வட கொரியா மற்றும் தென் கொரியாவின் ராணுவ ஜெனரல்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தென் கொரியாவின் ‘யான்ஹாப்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் ராணுவ ஜெனரல்களும் இதற்கு முன் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பரில் சந்தித்து பேசினர். இந்நிலையில் நேற்றைய சந்திப்பு இருநாடுகளின் எல்லையில் உள்ள பன்முன்ஜோம் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
எனினும் இந்த செய்தியை தென் கொரிய அதிகாரிகள் உறுதிசெய்ய மறுத்துவிட்டனர். தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பார்க் சூ ஜின் கூறும்போது, “தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற தகவல்களை நாங்கள் உறுதி செய்ய முடியாது. பிற விஷயங்களையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.
இந்த சந்திப்பு நேற்று காலை 10 மணிக்கு நடந்ததாகவும் ஆனால் இதை வெளிப்படையாக அறிவிக்க வட கொரியா விரும்பவில்லை என்றும் அந்நாட்டு துணை ராணுவப்படை வட்டாரங்கள் கூறியதாக யான்ஹாப் மேலும் தெரிவித்துள்ளது.
தென்கொரிய ராணுவ வட்டாரங்கள் கூறும் போது, “சமீப காலத்தில் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பதற்றத்தை தணிப்பதற்காக இப்பேச்சு வார்த்தை நடைபெற்றது” என்றன. கடந்த 7-ம் தேதி இரு நாடுகளின் கடற்படை வீரர்கள் ரோந்து வந்த போது, துப்பாக்கியால் சுட்டு மோதிக்கொண்டனர்.