உலகம்

உலக ஜனநாயகத்தின் கோயில் அமெரிக்கா: நாடாளுமன்றத்தில் மோடி புகழாரம்

செய்திப்பிரிவு

உலக ஜனநாயகத்தின் கோயிலாக அமெரிக்கா விளங்குகிறது என்று அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி நேற்றுமுன்தினம் அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்றிரவு அவர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

உலக ஜனநாயகத்தின் கோயி லாக அமெரிக்கா விளங்குகிறது. அந்த நாடு இதர ஜனநாயக நாடுகளை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கும் அமெரிக்கா ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது. இரு நாடுகளும் ஜன நாயகம், சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து செயல் படுகின்றன. அதுதான் நம்மை இணைத்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது எல்லோரும் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இன்று இந்தியா ஒரே நாடாக, ஒருமித்து முன்னேறு கிறது, ஒருமித்து கொண்டாடுகிறது.

எனது தலைமையிலான அரசின் வேத நூல் சட்டம் மட்டுமே. இந்தியாவில் வாழும் 125 கோடி மக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாழ்கிறார்கள். சுதந்திரமும் சமத்துவமும்தான் எங்களின் பலம்.

மகாத்மா காந்தியின் அஹிம்சை தத்துவம் மார்ட்டின் லூதர் கிங்கை ஈர்த்தது. அதுவே அமெரிக்காவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு அவர் பேசினார்.

உலகத் தலைவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசும் கவுரவம் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி (1985), நரசிம்மராவ் (1994), வாஜ்பாய் (2000) மன்மோகன் சிங் (2005) ஆகியோர் கூட்டுக் கூட்டத்தில் பேசியுள்ளனர்.

SCROLL FOR NEXT