காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அமெரிக்க தலையீடு தேவை என்ற பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று அமெரிக்கா செல்லும் வழியில், லண்டனில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அமெரிக்காவின் தலையீடு அவசியம் என்று வலியுறுத்திய அவர், “இந்தியா இந்த தலையீட்டை (மூன்றாவது நபர்) விரும்பாமல் இருக்கலாம். ஆனால், இந்த விவகாரத்தை (காஷ்மீர் பிரச்சினை) தீர்ப்பதற்கு உலக சக்திகளின் தலையீடு வேண்டும்” என்றார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இந்தக் கோரிக்கையை இந்தியா உடனடியாக மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று குறிப்பிட்டார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவது குறித்து கவலை தெரிவித்த அவர், அமெரிக்கா அளிக்கும் நிதி உதவியை இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு வெள்ளை மாளிகை அனுமதிக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.