உலகம்

இந்தியா - பாகிஸ்தான் பதற்றமான உறவுகளால் விரும்பத் தகாதது நிகழ்ந்துவிடக் கூடாது: அமெரிக்கா கவலை

பிடிஐ

ஆசியப் பகுதியின் பாதுகாப்பு நலன் கருதி பாகிஸ்தானும் இந்தியாவும் பதற்றங்களைத் தணிக்க பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இருநாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க அரசின் உதவி செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் இது குறித்து கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எங்களது உறவுகளில் நாங்கள் இரு நாடுகளுக்கிடையேயும் வலுவான உறவுகள் இருக்க வேண்டும் என்பதையே ஊக்குவித்து வந்துள்ளோம். தெளிவாக அப்பகுதியின் பாதுகாப்பு அம்சம் கருதியே இரு நாடுகளும் சுமுகத் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

இருநாடுகளுக்கிடையேயும் பதற்றம் அதிகரித்து, கட்டுப்படுத்த முடியாமல் சென்று ஏதாவது விரும்பத்தகாத சம்பவத்திற்கு வித்திடக்கூடாது என்பதே எங்களது உண்மையான அக்கறை.

இருநாடுகளும், இருநாட்டு அரசுகளும் வலுவான, சுமுகமான, ஆக்கபூர்வமான உறவுகளை பராமரிப்பது முக்கியமானது.

பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பு புகலிடமாகத் திகழ்வதற்கு எதிராக அந்நாடு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விவாதத்தின் பெருங்கவனம் இருந்து வந்துள்ளது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

அவர்களும் இந்தப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொண்டு வருகின்றனர், ஆனால் இன்னும் கூடுதல் நடவடிக்கை தேவை என்று அமெரிக்கா விரும்புகிறது.

இந்தியாவுடன் வலுவான, எழுச்சி மிக்க உறவுகளை வைத்துக்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. பாகிஸ்தானுடனும் நாங்கள் வலுவான உறவுகளை வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம், காரணம் அந்தப் பகுதியின் நலன்களுக்காகவே.

அமெரிக்க செயலர் ஜான் கெரி சமீபத்தில் இந்தியா, வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்லாததை வேறு விதமாக திரித்தல் கூடாது.

அது பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு குறித்த எதையும் அறிவுறுத்துவதற்காக அல்ல. அவர் எப்போதும் பாகிஸ்தான் மூத்த தலைவருடன் பேசியே வருகிறார், மேலும் சமீபமாகத்தான் பாகிஸ்தான் சென்று வந்தார். எனவே இதனை வேறு கோணத்தில் பார்ப்பது கூடாது.

குறிப்பாக அவர் இந்தியாவிற்கு சென்றது ராணுவ மற்றும் வணிகம்சார் நலன்களுக்காகவே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வங்கதேசம் சென்றார். அவர் முதல்முறையாக வங்கதேசம் செல்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

இவ்வாறு கூறினார் மார்க் டோனர்.

SCROLL FOR NEXT