மிகக் கடுமையான குளிர்காற்று வீசுவதால், அமெரிக்காவின் பல பகுதிகளில் உறைநிலைக்குக் கீழாக மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலவும் உறை நிலையால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க பருவநிலை கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆர்டிக் வெடிப்பு எனப்படும் மிகக் கடுமையான குளிர்காற்று அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் கனடாவில் வீசுகிறது. இதனால், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, தட்பவெட்பநிலை உறை நிலைக்குக் கீழ் சென்றுள்ளது.
தற்போது அடர் உறைநிலைக் காற்று மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அலாபாமா, டென்னிஸி பகுதிகளுக்கும் இந்த பனிப்புயலால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், போதுமான உணவுகளைக் கையிருப்பு வைத்துக் கொள்ளும்படியும் வானிலை முன்னறிவுப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஐந்து நிமிடங்கள் வரை ஆடை மூடாத பகுதிகள் இந்தக் குளிரால் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால், உடலை முழுவதுமாக மூடிக் கொள்ளும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
20 ஆண்டுகளில்...
கடந்த 20 ஆண்டுகளில் -51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெட்ப நிலை குறைந்து போயிருப்பது இதுவே முதல் முறை. கார் உள்ளிட்ட வாகனங்களை ஸ்டார்ட் செய்ய முடியாது. நீர் செல்லும் சாலைகளில் நீர் உடனடியாக உறைந்து விடும், குடிநீர் குழாய்கள் உறைந்து வெடித்து விடும் என பல்வேறு நகர நிர்வாகங்களும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
விமானங்கள் ரத்து
சிகாகோ, நியூயார்க் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்னசோட்டா மற்றும் வடக்கு டகோட்டா பகுதிகளில் பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. நேஷனல் புட்பால் லீக் போட்டிகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.