உலகம்

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தலைமை ஏற்கவேண்டும்: அமெரிக்க தூதர் கருத்து

பிடிஐ

திவீரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது என, அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வரும் ரிச்சர்ட் வர்மாவும் தனது பதவியில் இருந்து விலகுகிறார்.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட ரிச்சர்ட் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:

தீவிரவாதம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில், உளவுத் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல அபாயங்களை தவிர்த்துள்ளோம்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத குழுக்களால் இந்தியா பெரும் சவாலை சந்தித்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஹக்கானி நெட்வொர்க், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகளையும் குறிவைத்து தாக்குகின்றன.

தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்களை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உயர்மட்ட அளவில் அழுத்தம் தந்த வண்ணம் உள்ளது. ஊடுருவல் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறோம்.

மேற்கில் மட்டுமின்றி, வடகிழக்கு பகுதிகளிலும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. சர்வதேச அளவில் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பாடமாக இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய, அமெரிக்க ஒத்துழைப்பும் சர்வதேச அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது. தீவரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தலைமைப்பொறுப்பு ஏற்று வழிநடத்த வேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது.

இவ்வாறு ரிச்சர்ட் பேசினார்.

SCROLL FOR NEXT