சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதல்கள் குறித்து ஆராய ஐக்கிய நாடுகளின் ராணுவ பார்வை யாளர்கள் குழு பாகிஸ்தானில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.
கடந்த 9ம் தேதி இருநாடுகளுக் கிடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் குழுவிடம் பாகிஸ்தான் புகார் அளித்தது. அதன் பேரில், ஐ.நா. குழு பாகிஸ் தானில் ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை எல்லைப் பகுதியில் சியால்காட் பகுதிக்கு அருகில் உள்ள சர்வா, சர்பார் மற்றும் புக்லியான் ஆகிய இடங்களை பார்வையிட்டது.
பாகிஸ்தான் நாட்டு உயர் அதிகாரிகளின் தகவல்படி, அந்தக் குழு, தான் பார்வையிட்ட இடங்களில் உள்ள மக்களிடம் மனித மற்றும் உடைமை சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். அந்தக் குழு சியால்காட்டில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் உள்ள காயமடைந்த பொதுமக்களையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 64 பேர் காய மடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகுகிறது.