உலகம்

இந்திய வியூகத் தாக்குதல்: என்ன சொல்கிறது பாக். ராணுவம்?

ஏஎஃப்பி

எல்லையில் வியூகத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் பறைசாற்றிவரும் நிலையில், பாகிஸ்தான் தரப்போ அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் முகாமிட்டிருப்பதாக வந்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம் வியூக ரீதியான சில தாக்குதல்களை அப்பகுதியில் மேற்கொண்டது.

அதாவது நாட்டிற்குள் நுழைந்து நம் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை இவர்கள் ஏற்படுத்தல் கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்தத் தாக்குதலை நடத்தினோம். இதில் பயங்கரவாதக் குழுக்களுக்கும், அதனை ஆதரித்தவர்களுக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்திய தரப்பில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்த வெகு சில நிமிடங்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ். (உளவு அமைப்பு) மக்கள் தொடர்பு அறிக்கையில், "இந்தியா கூறுவதுபோல் எல்லையில் எந்தவித தாக்குதலும் நடக்கவில்லை. எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் பலியாகினர் என்பது உண்மையே. ஆனால் அதற்கும் இந்தியா சொல்லிக் கொள்ளும் வியூக ரீதி தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்திய தரப்பில் அதிகாலை 2.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. பீம்பர், ஹாட்ஸ்பிரிங் கேல், லிபா பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

'ஊடக கவன ஈர்ப்பு'

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வியூகத் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அளித்திருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளது இந்தியா. ஊடக கவனத்தை ஈர்ப்பதற்காக நடக்காத தாக்குதலை நடந்ததாக ஜோடித்துள்ளது. இந்தியா சொல்வதுபோல் ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அதற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுத்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானின் வான்வெளி எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப், "இந்திய தரப்பில் சிறிய ரக ஆயுதங்களே பயன்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 வீரர்கள் காயமடைந்துள்ளனர்" என்றார்.

இதற்கிடையில், அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு பேண வேண்டும் என்ற எங்கள் கொள்கையை பலவீனமாக கருதிவிட வேண்டாம், எங்கள் ராணுவத்தினர் எங்கள் பகுதியைக் காக்க போதிய வலுவும் திறமையும் உடையவர்கள்.

பாகிஸ்தான் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்த ஒரு தீய முயற்சியையும் அவர்கள் முறியடிக்கவல்லவர்களே என்று ஷெரிப் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT