உலகம்

ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ஒபாமாவின் இறுதி உரை

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நாட்டு மக்கள் அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் அதிபர் பராக் ஒபாமா (55) தனது இறுதி உரையில் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமா, 2013-ல் 2-வது முறையாக அதிபரானார். இவரது பதவிக் காலம் வரும் ஜனவரி 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், 45-வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், அதிபர் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோவில் ஒபாமாவுக்கு பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற்றது. தனது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சில் நாட்டு மக்களுக்கு இறுதி உரையாற்றினார். சுமார் 55 நிமிடங்கள் நீடித்த அவரது உரையின் சுருக்கம்:

நான் அதிபராக பதவியேற்ற பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு என்னுடைய திறமைதான் காரணம் என்று நம்பிக்கை கொள்வதற்கு பதில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அரசியலமைப்பு சட்டத்தை உறுதியாக பின்பற்றி நீங்கள் செயல்படுங்கள். “ஆம், நாம்தான் அதைச் செய்தோம். ஆம், இனியும் நம்மால் முடியும்” என நம்பிக்கை கொள்ளுங்கள்.

நான் பதவி ஏற்றபோது அமெரிக்காவில் நிறம் சார்ந்த பேச்சுகள் அதிகளவில் இருந்தது. நிற வெறி நமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அது நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. கடந்த இருபது வருடங்களுக்கு முன் இருந்த சூழலைக் காட்டிலும் தற்போதைய சூழல் சிறப்பாகத்தான் உள்ளது என உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் நான் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். நீங்கள்தான் என்னை சிறந்த அதிபராக உருவாக்கினீர்கள், நீங்கள்தான் என்னை சிறந்த மனிதராகவும் உருவாக்கினீர்கள்.

அதிபர் தேர்தலின்போது முஸ்லிம்கள் குடியேற தடை விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒரு கட்சியினர் (ட்ரம்ப்) பேசினர். ஆனால் என்னைப் பொருத்தவரை முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கும் நம்மைப் போல நாட்டுப்பற்று உள்ளது.

மேலும் தீவிரவாதத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையாக போராடினேன். இதன்மூலம் தீவிரவாத தாக்குதல்கள் தடுக்கப்பட்டன. நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவேதான் முஸ்லிம்-அமெரிக்கர்களுக்கு எதிராக பாகுபாட்டை நான் ஆதரிக்க மறுக்கிறேன்.

சில நேரங்களில் அமெரிக்க ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்நிய சக்திகளிடம் நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஜனநாயகம் சீர்குலைந்துவிடும். எனவே நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் கட்சி பாகுபாடின்றி நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

நமது ஜனநாயகம் அழகான பரிசு. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அமெரிக்க குடிமக்களாகிய நீங்கள் பங்குபெறாமல் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை. நாம்தான் ஜனநாயகத்துக்கான சக்தியைக் கொடுக்கிறோம். நமது எதிர்காலம் சிறந்தவர்களின் கைகளில் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நாம் தளர்ந்து போகாதவரை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நம்மிடம் போட்டி போட முடியாது. அமெரிக்கர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பெண் வெறுப்பு, நிறவெறி, பாலியல் பாகுபாடு, மதவெறுப்பு போன்றவற்றை மறந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

முன்பு இருந்ததைவிட பல துறைகளில் அமெரிக்கா முன்னேறியுள்ளது. கடந்த 8 வருடங்களில் தீவிரவாத தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம். விரைவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் அழிக்கப்படும்.

பருவ நிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை காப்பற்றுவதற்கான முயற்சிகளை நாம் முன்னேடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் நம் குழந்தைகளுக்கு அதற்கான நேரம் இருக்காது. அவர்கள் அதற்கான விளைவுகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு ஒபாமா பேசினார்.

எனது சிறந்த தோழி மிஷெல்

மனைவி மகள்கள் குறித்து ஒபாமா பேசியபோது உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் வர அதைத் துடைத்துக்கொண்டு பேசியதாவது:

மிஷேல் எனக்கு மனைவியாகவும் எனது குழந்தைகளுக்கு அம்மாவாகவும் மட்டும் இருக்கவில்லை. எனக்கு சிறந்த தோழியாகவும் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாகவும் இருந்திருக்கிறார்.

அவருடைய பணியை அவரே தீர்மானித்தார். அதற்காக என்னிடம் அனுமதி கேட்கவில்லை. வெள்ளை மாளிகையை அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாக மாற்றினார். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்து என்னையும் நாட்டையும் பெருமையடையச் செய்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது மகள்களான மாலியாவும் சாஷாவும் புத்திசாலிகள், அழகானவர்கள். அதைக் காட்டிலும் அவர்கள் இருவரும் கனவுகளை உடையவர்கள். உங்கள் தந்தையாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT