கச்சா எண்ணெய் வளமிக்க புருனை நாட்டில் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கூடிய ஷரியத் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு மன்னர் ஹசனல் போல்கியா (67) புதன்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், "மே 1-ம் தேதி (வியாழக் கிழமை) முதல் ஷரியத் சட்டத்தின் முதல் பகுதி அமல்படுத்தப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக இந்த சட்டத்தின் பிற பகுதிகள் அமல்படுத்தப்படும்" என கூறப்பட்டுள்ளது.
குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு சவுக்கடி, உடல் உறுப்புகளை துண்டித்தல், சாகும் வரை கல்லால் அடித்தல் உள்பட கடுமையான தண்டனைகளை வழங்க ஷரியத் சட்டம் வகை செய்கிறது.
கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு நாடு முழுவதும் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.