வங்கதேசத்தில் கொலை வழக்கு ஒன்றில் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 8 பேருக்கு தூக்கு தண்டனையும் மேலும் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டு விரைவு நீதிமன்றம்.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பழைய டாக்காவின் பஹதுர் ஷா பூங்கா அருகே உள்ள ஒரு தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் பிஸ்வஜித் தாஸ்(24) என்ற டெய்லர் இறந்தார்.
அதே நாளில் இந்த சம்பவம் தொடர்பாக, சுத்ராபூர் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஜூன் 2-ம் தேதி சத்ரா லீக் அமைப்பைச் சேர்ந்த 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த டிரிபியூனல்-4 விரைவு நீதிமன்ற நீதிபதி ஏபிஎம் நிஜாமுல் ஹக், "குற்றம் சாட்டப்பட்டவர்களில் 8 பேரை சாகும் வரை தூக்கில் போட வேண்டும்" என புதன்கிழமை தீர்ப்பளித்தார். அப்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர் ஆஜராகி இருந்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து இறந்த தாஸின் சகோதரர் கூறுகையில், "தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது" என்றார். அந்நாட்டு சட்டப்படி, கீழ் நீதிமன்றங்கள் விதிக்கும் தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் மேல் முறையீடு செய்யாவிட்டாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.