உலகம்

நீஸ் தாக்குதல்: பிரணாப், மோடி உட்பட தலைவர்கள் கண்டனம்

பிடிஐ

பிரான்ஸ் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரான்ஸ் அதிபர் பிரான் சுவா ஹொலாந்தேவுக்கு எழுதி யுள்ள கடிதத்தில், தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் திருப்பதுடன், பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். “அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் மிகுந்த வேதனை அடைந்தேன். பிரான்ஸுடன் இந்தியா தோளோடு தோள் நிற்கும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பிரான்ஸ் உள்ளிட்ட இதர நாடுகளுக்கு எங்களின் வலுவான ஒத்துழைப்பை நல்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, “ஆற்றொணாத் துயரத்தில் உள்ள பிரான்ஸ் சகோதர, சகோதரிகளின் வலியை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. நீஸ் நகர தாக்குதல் குறித்த செய்தி அறிந்து திகைத்தேன். இந்த வன்முறைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகி றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “அமைதி மற்றும் ஜனநாயக நெறிமுறைகளின் மீதான நியாயமற்ற தாக்குதல்” என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம், அரபு தலைவர்கள்

முஸ்லிம் மத குருக்கள், அரபு தலைவர்கள் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர். சன்னி முஸ்லிம் அமைப்பின் போதனை மையமான அல் அசார், துனிசியா, எகிப்து முஸ்லிம் மதபோதகர் சாவ்கி ஆலம், ஆறு வளைகுடா நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் அல் ஸயானி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி, அராப் லீக் தலைவர் அகமது அப்துல் கெய்ட் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT