ஜப்பான் பிரதமரின் சர்ச்சைக்குரிய “யாசுகுனி” ஆலய வழிபாட்டுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சியோடா என்ற இடத்தில் யாசுகுனி ஆலயம் உள்ளது. 1867 ல் நடந்த போஷின் போர் முதல் இரண்டாம் உலகப் போர் வரை, போர்களில் இறந்த சுமார் 25 லட்சம் ஜப்பானியர்களின் நினைவாக இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் போர்க் குற்றவாளிகள் பலரின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை, ஜப்பான் ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்ட சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்தக் கோயிலுக்கு ஜப்பான் தலைவர்கள் செல்வதையும், சிலைகளை வணங்குவதையும் இந்நாடுகள் கண்டித்து வருகின்றன. சீனா – ஜப்பான் இடையே நெருங்கிய பொருளாதர உறவுகள் இருந்தாலும், அரசியல் ரீதியில் இந்நாடுகள் இடையிலான உறவில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை உள்ளடக்கி, சீனா கடந்த மாதம் புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது. இது இவ்விரு நாடுகள் இடையிலான உறவில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, சர்ச்சைக்குரிய யாசுகுனி ஆலயத்துக்கு நேற்று சென்று வந்தார். “வரலாற்றில் ஜப்பான் ராணுவம் அடைந்த வெற்றிகளின் நினைவுச் சின்னம் இது” என்றும் அவர் குறிப்பிட்டார்.ஷின்ஜோ அபே இந்தக் கோயிலுக்கு சென்றுவந்த சிறிது நேரத்தில் சீனா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அபேவின் இந்த செயல் சீன மக்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.