உலகம்

பாலினப் பாகுபாடு: மோசமான நிலையில் இந்தியா

பிடிஐ

பாலின பாகுபாடுகளை அகற்றுவதில் இந்தியா இன்னும் மிகவும் பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு 2014-ம் ஆண்டுக்கான பாலின பாகுபாடு குறியீடு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

142 நாடுகளில் எடுக்கப்பட்ட எந்த கணக்கின்படி, இந்தியா 114-வது இடத்தில் உள்ளது. அதாவது பாலின பாகுபாடுகளை அகற்றுவதில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள தரம் 114. இது கடந்த ஆண்டைவிட பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கடந்த 2013-ல் இந்தியா, பாலின பாகுபாடுகளை அகற்றுவதில் 101-வது இடத்தில் இருந்தது.

முதன்முதலில் 2006--ல் தான், சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு உலக நாடுகளின் பாலின பாகுபாடு குறியீடை வெளியிடும் பணியை தொடங்கியது. அரசியல், கல்வி, பொதுச்சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பாலின பாகுபாடுகள் குறித்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேயே இந்தக் குறியீடு வெளியிடப்படுகிறது.

பெண்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் வாய்ப்புகள் பொருத்தவரை இந்தியாவுக்கு 134-வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல், இந்தியப் பெண்களின் சராசரி வருமானம் ஆண்கள் சராசரி வருமானத்தைவிட மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி வளர்ச்சியில் இந்தியா 126-வது இடத்தில் இருக்கிறது. பெண்கள் பொதுச் சுகாதாரத்தை பேணுவதில், 141-வது இடத்தில் இருக்கிறது.

அரசியல் ஆறுதல்:

அரசியலில் இந்தியப் பெண்கள் பங்களிப்பு மட்டும் முன்னேற்றம் கண்டுள்ளது. உலகளவில் இந்தியா, 15-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியப் பெண் மக்கள் பிரதிநிதிகள் ஆண்களைவிட தங்கள் பணியை சிறப்பாக செயல்படுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT