ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலுக்கான (யுஎன்எச்ஆர்சி) தேர்தலில் சீனா, ரஷியா, சவூதி அரேபியா, கியூபா உள்ளிட்ட 14 நாடுகள் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவை இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக இருக்கும்.
ஜெனீவா நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 14 நாடுகளின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஐ.நா. பொது சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் சீனா, ரஷியா, சவூதி அரேபியா, கியூபா, அல்ஜீரியா, பிரிட்டன், பிரான்ஸ், மாலத்தீவுகள், மாசிடோனியா, மெக்சிகோ, மொராக்கோ, நமீபியா, தென்னாப்ரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய 14 நாடுகள் வெற்றி பெற்றன. இவற்றின் பதவிக்காலம் 2014 ஜனவரி 1-ம் தேதி தொடங்கும்.
முன்னதாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் 16-ல் 12 நாடுகள், ஐ.நா. வகுத்துள்ள அடிப்படைத் தகுதிகளை பெறத் தவறி விட்டன என ஐ.நா. கண்காணிப்பு மற்றும் மனித உரிமை பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டன.
இதுகுறித்து, ஜெனீவாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் ஹில்லல் நியூவர் கூறுகையில், "ரஷியா, சீனா, கியூபா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்கள் மீதே மனித உரிமைக்கு எதிராக நடந்து கொண்டுள்ளன. மேலும், இந்த நாடுகள் மனித உரிமையைக் காப்பாற்றும் ஐ.நா. நடவடிக்கையை எதிர்த்து வாக்களித்துள்ளன" என்றார்.