முழுமையான நிர்வாகச் சுதந்திரம் கோரி, சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டக்காரர்கள் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்துத் தடைகளை அகற்ற அரசு கெடு விதித்துள்ளது. இறுதிக் கெடு நெருங்கும் நிலையில், போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவது குறித்து போராட்டக்காரர்கள் இடையே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
‘நடுவண் ஆக்கிரமிப்பு’ (ஆக்குபை சென்ட்ரல்) இயக்கம், மாங்க் காக் பகுதியிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறுவதாக அறிவித்துள்ளது. துறைமுக பகுதியிலுள்ள அரசு அலுவலகங்கள் அருகே நடைபெறும் பிரதான போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், முக்கிய சாலைகளில் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்துத் தடைகளை நீக்கி, போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மாணவர் இயக்கம் ஆதரவில்லை
ஆனால், இந்த அறிவிப்புக்கு மாணவர் இயக்கம் எவ்வித ஆதரவையும் அறிவிக்கவில்லை. 17 வயது ஜோஸ்வா வோங் தலைமையிலான ‘ஸ்கூலரிஸம்’ அமைப்பு, ஹாங்காங் மாணவர் கூட்டமைப்பு ஆகியவை, போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறி பிரதான போராட்டக்களத்துக்குச் செல்லும்படி அழைப்பு விடுக்கவில்லை என அறிவித்துள்ளன.
இதனிடையே மாணவர் அமைப்பு தலைவர் லெஸ்டர் சும், துணை தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் குறித்து அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பள்ளிகள் திறக்கப்படும்
போராட்டம் காரணமாக மூடப்பட்ட இடைநிலைப் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.