சங்கீதாவின் ஊதியத்தை கணக்கிடுவதில் அமெரிக்க போலீஸார் தவறு செய்துவிட்டனர். அமெரிக்க சட்டப்படி சரியான ஊதியத்தைத்தான் சங்கீதாவுக்கு தேவயானி வழங்கி வந்துள்ளார் என்று தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் அர்சாக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: “இந்த வழக்கு விசாரணையை நடத்திய தூதரக பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி மார்க் ஸ்மித், சங்கீதாவின் ஊதியத்தை கணக்கிடுவதில் தவறு செய்துவிட்டார்.
சங்கீதாவுக்கு வழங்கிய ஊதியம் தொடர்பாக தேவயானி அளித்த ஆவணங்களை அவர் சரியாக ஆய்வு செய்யவில்லை.
சங்கீதாவுக்கு விசா பெறுவதற்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட டி.எஸ். 160 படிவத்தில் 4,500 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம்) மாத ஊதியம் என்று தேவயானி குறிப்பிட்டுள்ளதை, அது சங்கீதாவுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட ஊதியம் என மார்க் ஸ்மித் கருதிவிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள 4,500 அமெரிக்க டாலர் தேவயானி பெறும் அடிப்படை ஊதியமாகும். அது சங்கீதாவுக்கான ஊதியம் அல்ல.
சங்கீதாவுடன் தேவயானி மேற்கொண்ட ஒப்பந் தத்தில், சங்கீதாவுக்கு மாதந்தோறும் 1,560 அமெ ரிக்க டாலர் (சுமார் ரூ.96,400) ஊதியமாகத் தரப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சங்கீதாவுக்கு ஏ-3 விசா பெற விண்ணப்பித்தபோது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கச் சட்டப்படி வாரத்துக்கு 40 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என உள்ளது. மாதம் 1,560 அமெரிக்க டாலர் ஊதியம் என்ற அடிப்படையில் கணக்கிடும்போது சங்கீதாவுக்கு ஒரு மணி நேரத்துக்கு 9.75 அமெரிக்க டாலர் அளிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிதிமுறைக்கு உள்பட்ட ஊதியம்தான்.
ஊதியம் தொடர்பான விவரங்களை உறுதி செய்த பின்புதான் வழக்கு தொடரும் முடிவை அரசுத் தரப்பு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதில் குளறுபடி நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை தூதரக ரீதியாக பேச்சு நடத்தி முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே சமரசத் தீர்வு காணும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை” என்றார் டேனியல் அர்சாக்.
டேனியல் அர்சாக்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து தேவயானிக்கு எதிராக அரசுத் தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பிரீத் பராரா அலுவலகம் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “இந்திய அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதில் வீட்டுப் பணியாளர்கள் குறித்த ஊதியம், உரிமைகள் உள்ளிட்ட இதர விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்” என்றார்.