உலகம்

உலக மசாலா: செய்தித்தாள்களின் காதலர்!

செய்திப்பிரிவு

சீனாவின் குவாங்ஸி பகுதியில் வசிக்கும் 74 வயது சீ ஜிலின், கடந்த 36 ஆண்டுகளாகச் செய்தித்தாள்களைச் சேகரித்து வருகிறார். கூடம், படுக்கையறைகள், சேமிப்பு அறை என்று வீட்டில் உள்ள 7 அறைகளிலும் செய்தித்தாள்கள் மேற்கூரையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது சமையலறையிலும் சேமிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். எழுதுவதில் ஆர்வம் அதிகம். எங்கள் பகுதி நாடகக் குழுவில் இணைந்து கதை, வசனம் எழுத ஆரம்பித்தேன். என்னால் அதில் தனித்துவத் தைக் காட்ட முடியவில்லை. அன்று முதல் என் திறமையை வளர்த்துக் கொள்வதற்காகச் செய்தித்தாள்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். சில மாதங்களிலேயே என்னுடைய எழுத்தில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. செய்தித்தாள் வாசிப்பதால் பொதுஅறிவு பெருகியது. அதை என்னுடைய எழுத்துகளில் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. பல்வேறு நாடகப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றேன். முப்பதாண்டுகளில் நடைபெற்ற எந்த நிகழ்வையும் இந்தச் செய்தித்தாள்களின் துணைகொண்டு எழுதிவிட முடியும். ஓய்வுபெற்ற பிறகு செய்தித்தாள்கள், பத்திரிகைகள் அனைத்தையும் வாங்குவதற்குச் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் என்னால் வாங்காமல் இருக்க முடியாது. என்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு சமாளித்து வருகிறேன்’ என்கிறார் சீ ஜிலின்.

செய்தித்தாள்களின் காதலர்!

அமெரிக்காவின் ஓக்லஹாமா பகுதியில் வசிக்கிறார் அபே அஹெர்ன். இவரது 19 வார கர்ப்பத்தில், கருவுக்குக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மூளை, மண்டையோடு முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் கருச்சிதைவு ஏற்படலாம். இது முழுக் குழந்தையாகப் பிறக்க வாய்ப்பில்லை என்றார்கள் மருத்துவர்கள். அபேக்கும் கணவர் ராபர்ட்டுக்கும் கருவைக் கலைக்க மனம் இல்லை. ‘எத்தனை நாட்கள் உயிருடன் இருந்தாலும் குழந்தையைப் பெற்றே தீருவது என்று முடிவு செய்தோம். நல்லவேளையாகக் கருச்சிதைவு ஏற்படவில்லை. பிரசவ நேரம் வந்தது. மருத்துவர்கள் குழந்தை பிறந்து சில மணி நேரமே உயிருடன் இருக்கும் என்றனர். நானும் ராபர்ட்டும் குழந்தையின் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்துவிட முடிவு செய்தோம். ஏகப்பட்ட குழாய்கள் பொருத்தப்பட்ட குழந்தையை என்னிடம் ஒப்படைத்தனர். எங்கள் இரு மகள்களும் தங்கைக்கு ஆனி என்று பெயர் சூட்டினார்கள். தங்கையுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அம்மா, அப்பா, அக்காக்களின் அன்பிலும் அரவணைப்பிலும் ஆனி 15 மணி நேரம் அற்புதமாக வாழ்ந்தாள். பிறகு ஆனியை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். மிகத் துன்பமான நேரம். உறவினர்களும் நண்பர்களும் எவ்வளவோ முறை கலைத்துவிடச் சொன்னார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். 15 மணி நேர அன்பையும் அரவணைப்பையுமாவது எங்களால் குழந்தைக்குக் கொடுக்க முடிந்ததே. ‘ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அவளது உடல் உறுப்புகளைத் தானமளிக்க இயலாது, உடலை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்’ என்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆனியைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார் அபே அஹெர்ன்.

நெகிழ வைத்துவிட்டார் அபே...

SCROLL FOR NEXT