2018 அமெரிக்க பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கூடுதலாக 10% நிதி ஒதுக்கீடு செய்யவும், வெளிநாட்டு நிதி உதவிகளை கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் கூறும்போது, "புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் அதிகம் கவனம் கொண்டுள்ளது. அதன்படி மே மாதம் அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு முக்கியதுவம் அளிக்கப்படவுள்ளது. மேலும் நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆனால் பட்ஜெட்டில் வரி தொடர்பான தனது திட்டம் குறித்து ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.
ராணுவ பாதுகாப்பை மேம்படுத்த 54 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு தனது ஆட்சியில் முக்கியதுவம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.