மனைவியை கொலை செய்யவில்லை, என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது’ என்று இந்திய தொழிலதிபர் ஷ்ரைன் தேவானி (34) நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரிட்டன்வாழ் இந்தியத் தொழிலதிபரான ஷ்ரைன் தேவானிக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த அனிக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு தேனிலவுக்காக சென்றபோது 2010 நவம்பர் 13-ம் தேதி மர்ம நபர்களால் அனி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஷ்ரைன் தேவானி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், கடத்தல் காரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர், அவர்கள் அனியை சுட்டுக் கொலை செய்துவிட்டனர், நான் மட்டும் தப்பிவிட்டேன் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்க போலீஸார் விசாரணை நடத்திய போது, ஷ்ரைன் தேவானியே கூலிப்படைக்கு பணம் கொடுத்து மனைவியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு கேப்டவுன் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருதரப்பு விசாரணை முடிந்து தீர்ப்பு நாள் நெருங்கி வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று கேப்டவுன் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது ஷ்ரைன் தேவானி நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத் தில் கூறியதாவது:
எனது மனைவியை நான் மிகவும் நேசித்தேன். அவரை நான் கொலை செய்யவில்லை, கடத்தல்காரர்கள்தான் அவரை சுட்டுக் கொன்றனர். தன்பாலின உறவில் எனக்கு ஈடுபாடு உண்டு என்பது உண்மைதான். அதனால் எனது திருமண வாழ்க்கையில் பாதிப்பு கிடையாது.
எனக்கு குழந்தை பிறந்தால் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அதுகுறித்து எனது மனைவியிடம் முன்கூட்டியே கூறியுள்ளேன். அவர் என் மீது பரிவு கொண்டு வருத்தப்பட்டார். கடைசிவரை எனது மனைவியை நேசித்தேன். அவரும் நேசித்தார் என்று தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட அனியின் தந்தை வினோத் கூறியபோது, எனது மகளின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், தீர்ப்பு நாளுக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.