உலகம்

குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்படும்: ஐ.நா சபையில் இந்தியா உறுதி

பிடிஐ

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

ஐ.நா. பொது சபையின் 3-வது கமிட்டி கூட்டம் நியூயார்க்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகப் பணியின் முதன்மை செயலாளர் மயான்க் ஜோஷி பேசியதாவது:

உலக குழந்தைகளில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெண் சிசு கொலையைத் தடுக்க கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறியும் சோதனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தப்படுகிறது. ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக அவர்களின் இடைநிலைக் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT