ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆபாச பட விவகாரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் சிக்கியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த ஒரு கும்பல், சிறார்களை தங்கள் வலையில் வீழ்த்தி ஆபாச படம் எடுத்து விற்று வருவது 2010-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கும்பலுக்கு ஜெர்மனி உள்பட 94 நாடுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 386 சிறார்களை மீட்ட கனடா போலீஸார், சந்தேகத்தின்பேரில் 300 பேரையும் கைது செய்தனர்.
இந்த கும்பல் குறித்து போலீஸார் விசாரித்தபோது அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கனடா கும்பலுக்கு ஜெர்மனியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் செபாஸ்டியன் எடாத்தி (44) என்ற எம்.பி.யும் அடங்குவார் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜெர்மனி போலீஸாருக்கு கனடா போலீஸார் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக செபாஸ்டியன் எடாத்தி குறித்து ஜெர்மனி போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தினர். செபாஸ்டியனின் பெற்றோர் கேரளத்தில் இருந்து ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தவர்கள். அங்கு சிறுவயதிலேயே சோஷியல் டெமாகரட் கட்சியில் சேர்ந்த செபாஸ்டியன் தற்போது அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
ஜெர்மனியில் ஆட்சியில் உள்ள கிறிஸ்டியன் டெமாகரட் யூனியன் கட்சி தலைமையிலான கூட்டணியில் சோஷியல் டெமாகரட் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டபோது செபாஸ் டியனுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரகசிய விசாரணை காரணமாக அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கட்சி மேலிட வற்புறுத்தல் காரணமாக 15 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த செபாஸ்டியன் கடந்த 8-ம் தேதி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குறிப் பிடும்படியாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த வழக்கு குறித்து ஜெர்மனி மூத்த அமைச்சர் பீட்டர் பிரெட்ரிக் என்பவர் செபாஸ் டிய னுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக சில நாள்களுக்கு முன்பு அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஆபாச பட விவகாரம் ஜெர்மனி அரசியல் தலைவர்கள் பலரின் எதிர்காலத்தை அடுத்தடுத்து அழித்துவரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை செபாஸ்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“என் மீது அபாண்டமாக பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, வழக்கை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர் ஜோர்க் புரோலிச் உண்மைகளை மூடி மறைக்கிறார், அடிப்படை ஆதாரம் இன்றி என் மீது விசாரணை நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக எனது அரசியல் வாழ்க்கையையும் தனிப்பட்ட, சமூக வாழ்க்கையையும் சீர்குலைக்க சதி நடக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.