என்எஸ்ஜி விவகாரத்தால் இந்திய உறவில் பாதிப்பு ஏற்படாது என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
அணு மூலப்பொருட்கள் விநியோக குழுவில் இணைய இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. சீனா மட்டும்ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது: என்எஸ்ஜி விவகாரத்தால் இந்திய, சீன உறவில் பாதிப்பு ஏற்படாது. இருநாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சீனாவுக்கு வருகை தந்தார். அவரது பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேச உள்ளனர். இதன்மூலம் இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.