உலகம்

இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு பாகிஸ்தானிடமிருந்து ஆதரவு

செய்திப்பிரிவு

தடை செய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு பாகிஸ்தானிலிருந்து ஆதரவு கிடைக்கிறது. அதனால்தான் அந்த அமைப்பு மிகக் கொடியதாக இருப்பதுடன், தமக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சமாளித்து எழவும் முடிகிறது என்று அமெரிக்காவின் உள்ள உட்ரோ வில்ஸன் சர்வதேச கல்வியாளர்கள் மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

‘ஜிகாதி வன்முறை: இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஜிகாதி இயக்கமானது உள்நாட்டுக்குள் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதற்கு வெளிநாட்டு பரிமாணம் இருக்கிறது. உள்நாட்டில் காணப்படும் வகுப்புவாதம் சார்ந்த பிரச்சினைகள், பழிதீர்க்கும் வெறி போன்றவற்றின் விளைவாகவே இந்திய ஜிகாதி இயக்கம் இந்திய முஜாஹிதீன்களாக உருவெடுத்துள்ளது.

பாகிஸ்தான் அரசிடமிருந்தும் பாகிஸ்தான், வங்கதேசத்தின் தீவிரவாத குழுக்களிடம் இருந்தும் ஆதரவு கிடைப்பதால் இந்திய முஜாஹிதீன் அமைப்பு மிக அபாயகரமானதாகவும் தமக்கு நெருக்கடி வரும்போது மீண்டெழவும் முடிகிறது என்று தனது 100 பக்க அறிக்கையில் அந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பரவலாக செயல்படும் இந்திய முஜாஹிதீன் அமைப்பானது தற்போது பாகிஸ்தானில் முகாம் அமைத்து செயல்படுகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட், சவூதி அரேபியா என அதன் நடமாட்டம் இருக்கிறது என தெற்கு ஆசிய பாதுகாப்பு வல்லுநர் ஸ்டீபன் டேங்கல் என்பவரை ஆசிரியராக கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆதரவுதான் இந்தியாவில் தீவிரவாதம் வலுவாக வேரூன்ற காரணமாகிறது என்றும் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை ஜனவரி 2012லிருந்து செப்டம்பர் 2013 வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி அடிப்படையில் தயாரானது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் கள அளவில் நடத்திய பேட்டிகள், சம்பந்தப்பட்ட முக்கிய வட்டாரங்கள், அதன் சார்பு வட்டாரங்களின் தகவல் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் இந்திய முஜாஹிதீன்களும் அங்கம் வகிக்கின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புகளில் எல்லாமும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, வங்கதேசத்தில் இயங்கும் ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி போன்ற வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு உடையவை அல்ல.

இந்திய முஜாஹிதீன்தான் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது. சின்னஞ்சிறு அமைப்புகளுடனும், எதிர்காலத்தில் தீவிரவாதிகளாக பரிணமிக்கும் நோக்கில் தொகுப்புகளாக செயல்படும் குழுக்களுடனும் இணைந்து செயல்படுவதுடன் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவற்றை தம் அமைப்பில் இணைத்துக் கொள்ளவும் இந்திய முஜாஹிதீன் அமைப்பு முயற்சி மேற்கொள்கின்றது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT