கொரியப் போரின்போது, குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து தென் கொரியாவிலும் வடகொரியாவிலும் வாழ்பவர்கள், உற்றார் உறவினரை மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதை கைவிட்டு விடக் கூடாது என்று வடகொரியாவுக்கு தென் கொரிய அதிபர் பார்க் ஜியுன் ஹே எச்சரித்துள்ளார்.
தென்கொரியா-அமெரிக்கா இடையே ராணுவ கூட்டுப்பயிற்சி நடப்பதால், பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்வதை மறு பரிசீலனை செய்வோமென்று வட கொரியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் பார்க் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
1950-53ல் நடந்த கொரிய போரின் போது லட்சக்கணக்கானோர் சொந்த பந்தங்களை விட்டு வட கொரியா, தென் கொரியாவுக்கு என பிரிந்தனர். அவர்களில் ஏராளமானவர்கள் உறவினர்களை மீண்டும் சந்திக்கவோ, தொடர்புகொண்டு பேசவோ முடியாமல் உயிரிழந்துவிட்டனர். இப்போது உயிருடன் இருப்பவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களை அடையாளம் காண்பதே அரிதானதாகும் என்று கண்ணீர் மல்க சிலர் சோகத்துடன் தெரிவிக்கின்றனர்.
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்க கடந்த புதன்கிழமை இரு எதிரி நாடுகளும் ஆலோசனை நடத்தின. இதைத்தொடர்ந்து பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் சந்தித்துப் பேசி ஏக்கங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பாக பிப்ரவரி 20 முதல் 25 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்க ,கடந்த ஆண்டு செப்டம்பரில் திட்டமிடப்பட்டது.ஆனால் வட கொரியா கடைசி நேரத்தில் ரத்து செய்தது. பிரிந்தவர்கள் தமது குடும்பத்தாரை மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தால் கொரிய தீபகற்பத்தில் அது நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் என்றும் பார்க் தெரிவித்துள்ளார்.