தென் ஆப்பிரிக்காவின் ரஸ்ட்டன் பர்க் நகரில் செயல்படும் உலகின் இரு முன்னணி பிளாட்டின உற்பத்தி நிறுவனங்களின் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இம்பாலா பிளாட்டினம், லான் மின் ஆகிய நிறுவனங்கள், பிளாட்டின உற்பத்தியில் உலக அளவில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களின் மிகப்பெரிய தொழிற்சங்க அமைப்பான ஏ.எம்.சி.யு., ஊதிய உயர்வு கோரி திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வேலை நிறுத்த நோட்டீஸ் 48 மணி நேரத்துக்கு முன்னதாக நிர்வாகத்திடன் வழங்கப்படும் என்று ஏ.எம்.சி.யு.வின் தலைவர் ஜோசப் மத்துன்ஜவா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிளாட்டின உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் ஆங்கிலோ அமெரிக்கன் பிளாட்டினம் நிறுவன தொழிலாளர்களையும் இப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக அவர்களுடன் பேசவிருக்கிறோம் என்றும் ஜோசப் மத்துன்ஜவா தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களில் தொடக்க நிலை ஊழியர்களுக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் தற்போது சுமார் 28 ஆயிரம் ஊதியம் வழங்கப் படுகிறது. இதனை சுமார் ரூ.70 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென தொழிலாளர்கள் கோருகின்றனர்.
உலகின் பிளாட்டின உற்பத்தி யில் 80 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பால் உலக அளவில் பிளாட்டினம் சப்ளை பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
சுமார் ஒரு லட்சம் உறுப்பினர் களைக் கொண்ட ஏ.எம்.சி.யு. தொழிற்சங்கம், தங்க உற்பத்தி நிறுவனங்களிலும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனது. எனினும் தங்க உற்பத்தி நிறுவனங்களில் இந்த அமைப்புக்கு போதிய செல்வாக்கு இல்லை.