உலகம்

இப்படி ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது: ஒபாமா

செய்திப்பிரிவு

நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவரை உலகம் இனி பார்க்க முடியாது என்று மண்டேலா மறைவு பற்றி இரங்கல் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

மண்டேலா மறைவு பற்றிய தகவல் கிடைத்ததுமே வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் தனது துயரத்தை பகிர்ந்துகொண்டார் ஒபாமா.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நெல்சன் மண்டேலாவை உதாரணமாக கொண்டு ஊக்கமும் உத்வேகமும் பெற்ற லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எனது முதல் அரசியல் நடவடிக்கையே நிறவெறி எதிர்ப்பு சார்ந்தது தான். அவரது பேச்சுகளையும் எழுத்துகளையும் பற்றி நான் ஆய்வு செய்வேன். தனது வாழ்நாளில் நெல்சன் மண்டேலா வகுத்துக்கொண்ட உதாரணத்தை புறந்தள்ளிவிட்டு எனது வாழ்வை கற்பனை செய்ய முடியவில்லை. நம்மை விட்டு அவர் பிரிந்தாலும் எல்லா காலத்திலும் அவர் நிலைத்து நிற்பார்..

பிறரது சுதந்திரத்துக்காக, கண்ணியத்துடன் மன உறுதியில் தளராமல் நின்று தனது தனிப்பட்ட சுதந்திரத்தை தியாகம் செய்து தென்னாப்பிரிக்காவையே மாற்றியவர். அதன் மூலம் அனைவரையும் கண்கலங்கச் செய்தவர் அவர்.

மக்களும் நாடுகளும் சிறப்பு நிலைக்கு செல்ல முடியும் என்பதை அவரது வாழ்வில் சிறைக் கைதியாக இருந்து அதிபர் பதவியை அடைந்த அவரது பயணம் உணர்த்தும்.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜுமா

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய இரங்கல் உரையில் அதிபர் ஜேகப் ஜுமா கூறியதாவது:

ஜனநாயக தென்னாப்பிரிக்க நாட்டின் நிறுவன அதிபர் மண்டேலா.அவர் நம்மை விட்டு அகன்று விட்டார். தமது தலைசிறந்த மகனை நாடு இழந்து விட்டது. தேசத் தந்தையை நமது மக்கள் இழந்து பிரிவுத் துயரால் வாடுகிறார்கள். என்றார் ஜுமா.

பான் கி மூன்:

உலக அரங்கில் தனி முத்திரை பதித்த தலைவர் நெல்சன் மண்டேலா. கண்ணிய மிக்கவர், தனித்துவமிக்க சாதனையாளர், நீதிக்காக சளைக்காமல் போராடியவர், அத்தகைய தலைவரின் மறை வால் வேதனை, துயருக்கு உள்ளாகியுள்ளேன் என்று இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் பான் கி மூன்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் மண்டேலா மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளின் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திட உந்து சக்தியாக திகழ்ந்த அரியதொரு தலைவர் மண்டேலா. தமது வாழ்நாளில் அரசியல் தலைமைத்துவத்திலும் தார்மீக நெறிகளிலும் அவர் காட்டிய தனித்துவம் புகழுக்குரியது என்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு கவுன்சில் தமது இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நெல்சன் மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாக அறிவித்துள்ளது ஐநா பொதுச்சபை.

தனிநபரை கவுரவப்படுத்த இதுபோல் சர்வதேச தினம் அறிவிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

‘தி எல்டர்ஸ்’ அமைப்பு

அமைதி, மனித உரிமைகளை கட்டிக்காத்திட உலகின் பல்வேறு தலைவர்களை இடம்பெறச் செய்து நெல்சன் மண்டேலா அமைத்த ‘தி எல்டர்ஸ்’ என்ற அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான கோபி அன்னான், தனது இரங்கல் செய்தியில் தார்மிக நெறிகளுக்கு திசைகாட்டி கருவியாக விளங்கிய உன்னத தலைவரை உலகம் இழந்துவிட்டது என்றார்.

பிரிட்டிஷ் பிரதமர்

நெல்சன் மண்டேலா மறைவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.

உலகுக்கே பேரொளியாக திகழ்ந்த மாபெரும் தலைவர் மறைந்துவிட்டார். நமது காலத்துக்கு மட்டுமே சொந்த மான தலைவர் அல்ல அவர். எல்லா காலத்திலும் மறையாத தலைவர் அவர். தென்னாப்பிரிக்கா விடுதலை பெற போராடி முதல் அதிபராக அமர்ந்த மண்டேலா, நாடு சுதந்திரம் அடையவும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவும் எவ்வளவோ இன்னல்களை எதிர் கொண்டவர். அவரது மறைவால் துயருற்றுள்ள தென்னாப்பிரிக்க மக்களின் சோகத்தை பிரிட்டனும் பகிர்ந்துகொள்கிறது.

அவரை நான் சந்தித்ததுதான் எனது வாழ்வில் கிடைத்த அரிய கவுரவம். அவரது குடும்பத்தாருக்கும் தென்னாப்பிரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் என்றார் கேமரூன்.

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி

டவ்னிங் தெருவில் பிரிட்டிஷ் பிரதமர் அலுவலக கட்டடத்தின் மேல் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதன் அடையாளமாக அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின்

நெல்சன் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரி வித்து தென்னாப்பிரிக்க அதி பர் ஜேகப் ஜுமாவுக்கு செய்தி அனுப்பியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின்.

எத்தகைய இடர்ப்பாடு ஏற்பட்டபோதிலும் மனம் தளராமல் மனிதநேய லட்சியம், நீதி நேர்மையிலிருந்து விலகாமல் விடாப்பிடியாக நின்ற தலைவர் மண்டேலா. தென்னாப்பிரிக்கா, ரஷ்யா இடையே நெருக்கமான உறவு ஏற்பட அவர் ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது. ஆப்பிரிக்காவின் நவீன சரித்திரத்தின் சகாப்தத்திலிருந்து மண்டேலா பெயரை பிரித்துப் பார்க்க முடியாது என்று ஜேகப் ஜுமாவுக்கு அனுப்பிய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் புதின்.

சீனா

சீனாவின் பழைமையான நண்பர் மண்டேலா என வர்ணித்துள்ள சீனா, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கும் உலகுக்கும் வரலாற்று முக்கி யத்துவம் மிக்க பங்களிப்பு வழங்கியவர் மண்டேலா என் றார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.

சீனா-தென்னாப்பிரிக்க உறவு மலரவும் மேம்படவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு அளித்தவர் மண்டேலா என்று தெரிவித்துள்ளார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹாங் லே.

மண்டேலாவை இழந்து துக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தாருக்கும் தென்னாப்பிரிக்க அரசுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் சீனா தெரிவித்துக்கொள்கிறது என்று எழுத்துபூர்வமான அறிக்கையில் ஹாங் லே தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலிய பிரதமர்

அரசியல் தலைவர் என்ற பார்வையில் மட்டும் அல்லாமல் அதற்கும் மேலாக தார்மீக நெறிமிக்கவர் என்ற வகையில் உலகம் என்றென்றும் அவரை மனதில் வைத்து புகழ்பாடும் என்று தனது இரங்கலில் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்.

ஜப்பான் பிரதமர்

நிற வெறிக்கு முடிவு காண போராடிய மாபெரும் தலைவர் மண்டேலா. தமது தேசத்தை கட்டமைக்கும் பணியில் அனைவரையும் அரவணைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சாதனை செய்தவர் என்றார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

தென்னாப்பிரிக்காவின் கடைசி வெள்ளைஇன அதிபர் எப்டபிள்யு டி கிளர்க், பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த், இஸ்ரேல் பிரதமர் ஷிமோன் பெரஸ், மியான்மர் ஜனநாயக இயக்கத்தலைவர் ஆங் சான் சூச்சி, பிரிட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யு புஷ்,

பில் கிளிண்டன், நோபல் பரிசு பெற்ற டெஸ்மாண்ட் டுடு, உள்ளிட்டோரும் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT