சிங்கப்பூரில் சுதந்திர தின உரையாற்றிக் கொண்டிருந்த அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் (64) லேசாக மயக்கமடைந்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.
சிங்கப்பூரில் ஆகஸ்ட் 9-ம் தேதி 51-வது சுதந்திர தினம் (தேசிய தினம்) கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் லூங் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென நிலை தடுமாறினார்.
இதையடுத்து, அவரை அங் கிருந்து அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். சிறிது நேரத்தில் பிரதமரின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமரின் இதயம் சீராக இயங்குகிறது. அவருக்குப் பக்கவாதம் இல்லை. பயப்படும்படி ஒன்றும் இல்லை, தொடர்ந்து பேசிக்கொண்டிருந் ததால் களைப்படைந்துவிட்டார்” என கூறப்பட்டிருந்தது.
பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மேடைக்கு வந்த லூங், மீண்டும் பேசத் தொடங்கினார். அவர் பேசும்போது, “எனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்ததற்கு நன்றி. உங்கள் அனைவரையும் நான் அச்சத்தில் ஆழ்த்திவிட்டேன். எனக்கு ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.