உலகம்

ஏழைக் குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள்: யுனிசெப் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஏழைக்குழந்தைகளுக்கு உதவு வதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெப்) கோரியுள்ளது.

உலக குழந்தைகளின் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையை யுனிசெப் வெளியிட்டது. அதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் விளைந்த பயன் களாக, 1990-ம் ஆண்டிலிருந்து சிசு மரணம் 53 சதவீதம் குறைந்துள்ளது, அதிகபட்ச வறுமையின் அளவு குறைந்திருப்பது ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம், தடுக்க முடியக் கூடிய நோய்களுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 5 வயதுக்கு உட்பட்ட 6.9 கோடி குழந்தைகள் பலியாகக் கூடும், 16.7 கோடி குழந்தைகள் ஏழ்மையால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிக மோசமான பாதிப்புகள் மீது கவனம் செலுத்தாவிட்டால், இதுவரை அடைந்த இலக்குகளைத் தொடரவோ, அடுத்த இலக்குகளை நோக்கி வேகமாகச் செயல்படவோ முடியாது என யுனிசெப் துணை செயல் இயக்குநர் ஜஸ்டின் போர்ஸித் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் கூறியுள்ள படி, தெற்கு ஆசியா, சஹாரா துணைக்கண்டத்தில், கல்வி பயிலாத பெண்களுக்கு பிறந்து 5 வயதை அடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக் கை, பள்ளி இறுதிக் கல்வி பயின்ற பெண்களுக்குப் பிறந்து 5 வயதுக்குள் இறக்கும் குழந்தை களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

SCROLL FOR NEXT