ராணுவப் புரட்சிக்குப் பழக்கப்பட்டுப் போன பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அரிதான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி குவாமர் ஜாவேத் பாஜ்வா, ‘இந்தியாவின் ஜனநாயக மரபுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது இந்தியாவில் ராணுவமும், அரசியலும் தனித்தனியாக இயங்குவதை அவர் சுட்டிக்காட்டி அரிதான ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.
“அரசாங்கத்தை ராணுவம் நடத்தக்கூடாது. ராணுவம் அரசியல் சாசனம் அளித்துள்ள விளக்கங்களுக்குட்பட்ட பங்கை ஆற்றினாலே போதும். மேலும் சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய ராணுவத்திற்கும் குடிமை அரசுக்கும் இடையேயான உறவை விதந்தோதும் அமெரிக்க யேல் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஸ்டீவன் வில்கின்சன் எழுதிய ‘ராணுவமும் தேசமும்’ (ஆர்மி அண்ட் நேஷன்) என்ற புத்தகத்தை ராணுவ அதிகாரிகள் படிக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்துள்ளார் பாக். ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா.
ராவல்பிண்டியில் ராணுவ அதிகாரிகளிடத்தில் உரையாற்றிய பாஜ்வா இதனை தெரிவித்திருப்பது பாகிஸ்தான் அரசியல்/ராணுவ சிந்தனைச் சட்டகத்தையே மாற்றுவதாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரிப் அரசுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகவும் அமைந்துள்ளதாக் பாகிஸ்தான் ஊடகங்கள் இதனை வரவேற்றுள்ளன.
1947-க்குப் பிறகே பாகிஸ்தான் என்ற நாட்டின் அரசியல் வரலாறு ராணுவப் புரட்சி, சர்வாதிகார ஆட்சி என்பதாகவெ பெரும்பாலும் இருந்து வந்துள்ளது. கடைசி ராணுவ ஆட்சி 2008-ல் முடிந்தது. ஆனால் திரைக்குப் பின்னால் ராணுவம் அதிகாரம் இருந்து வருகிறது.
மேலும் பாஜ்வா தீர்க்கதரிசனமாக கூறும் போது, “குடிமக்கள், அரசு ஆகிய்வற்றுடன் ராணுவம் போட்டியிடுவது நாட்டை சீரழிக்கும் செயல்’ என்று கூறியுள்ளார்.
வில்கின்சனின் புத்தகத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் முறையில் இந்தியா செய்துள்ள மாற்றங்களையும் அவர் விதந்தோதியுள்ளார்.
இந்த நூலில் இந்தியாவில் ஏன் ஜனநாயக மரபு வெற்றி பெறுகிறது என்பதை ஆர்வமூட்டும் நடையில் விளக்கியுள்ளதாக பாஜ்வா ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.