வங்கதேசத்தில் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை, ரயில், நீர்வழித்தடப் போக்குவரத்தை முடக்கும் போராட்டத்தை சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து திங்கள்கிழமை காலை 6 மணி வரை நடத்தப் போவதாக வங்கதேச தேசியவாத கட்சி அறிவித்திருந்தது. இதற்கு மேலும் சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி செய்தியாளர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கூறுகையில், “வரும் ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும். அவாமி லீக் கட்சியின் அரசு எங்களின் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்தைத் தடை செய்யும் போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை தலைநகர் டாக்காவில் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், சாலைகளில் பேரணி நடத்தியும் வங்கதேச தேசியவாத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ரிஸ்வியை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த வாரம் திங்கள்கிழமை தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அதை எதிர்த்து வங்கதேச தேசியவாத கட்சி 71 மணி நேர மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறையில் 22 பேர் உயிரிழந்தனர். டாக்காவில் 19 பேர் பயணம் செய்த பஸ்சுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில், 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறைகள் தொடர்பாக வங்கதேச தேசியவாத கட்சியின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) மிர்ஸா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கிர், இணைப் பொதுச் செயலாளர் ரிஸ்வி உள்பட 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடரும் கருத்து வேறுபாடு
வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதை ஆளும் கட்சியான அவாமி லீக் நிராகரித்துவிட்டது. அதற்கு பதிலாக அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்கலாம் என்று பிரதமர் ஷேக் ஹசீனா யோசனை தெரிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், வரும் ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையை கடந்த திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.