உலகம்

80 ஆண்டுகளுக்குப் பிறகும் கெட்டுப் போகாத பாம்பின் விஷம்: மருந்து கண்டுபிடிப்புக்கு உதவுகிறது

செய்திப்பிரிவு

மருந்து கண்டுபிடிப்புக்கு உதவும் பாம்பின் விஷம், 80 ஆண்டுகளுக்குப் பிறகும் கெடாமல் உயிரியல் ரீதியாக செயல்திறன் கொண்டதாக உள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் கேப்டோ பிரில், நீரிழிவு நோயை கட்டுப் படுத்த உதவும் பயேட்டா மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் மருந்துகள் தயாரிப்பதில் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள 52 விஷ மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றில் சில விஷம் 80 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டுள்ள போதிலும் செயல்திறனுடன் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வுக்குழுவைச் சேர்ந்த இணை பேராசிரியர் பிரியன் பிரை கூறுகையில், "முறையாக சேமித்து வைக்கப்பட்டுள்ள விஷத்தை அறிவியல் ரீதியாக பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும். விஷம் மற்றும் நச்சு ஆகியவை மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது" என்றார்.

காமன்வெல்த் சீரம் லெபாரட்டரீஸில் நோய்த்தடுப்பு ஆராய்ச்சிப் பிரிவு தலைவரா கவும் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தின் ஆஸ்திரேலிய நஞ்சு ஆராய்ச்சிப் பிரிவின் நிறுவன ருமான மறைந்த ஸ்ட்ருவன் சதர் லேண்ட் சேகரித்து வைத்திருந்த நஞ்சு மாதிரியைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஒவ்வொரு பாம்பு இனத்தின் விஷமும் வெவ்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டவை. எனவே, ஒவ்வொரு விஷ மாதிரியும் மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய மூலப்பொருளாக விளங் கும் என பிரை தெரிவித்தார்.

மேலும், உலகம் முழுவதும் விஷ பாம்பு இனங்கள் அருகி வருவதால், இனி விஷத்தை சேகரிப்பது கடினமானதாக இருக்கும். எனவே, ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ள விஷ மாதிரிகளை முறையாக சேமித்து வைக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் பிரை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT