நெருப்பை வைத்து முடி வெட்டும் கலையைச் செய்துவருகிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஃபாத் ராஜ்புத் என்ற சிகை அலங்காரக் கலைஞர். இவரது முடிவெட்டும் உத்தியை வீடியோ எடுத்து இணையதளத்தில் ஒரு வாடிக்கையாளர் வெளியிட, உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமாகிவிட்டார். எரியக்கூடிய ஒருவித துகள்களையும் திரவத்தையும் தலையில் தடவுகிறார். திடீரென்று தலையில் தீப்பற்றி எரிகிறது. கத்திரியையும் சீப்பையும் வைத்து மிக வேகமாக முடிகளை வெட்டி விடுகிறார். தலையில் தீப்பற்றி எரிவதை கண்ணாடி வழியாகப் பார்த்தபடி ஒரு வாடிக்கையாளர் பயமின்றி அமர்ந்திருக்கிறார். 15 நிமிடங்களில் அழகாக வெட்டப்பட்ட தலையலங்காரத்தைக் கண்டு திருப்தியடைந்தவராக நாற்காலியை விட்டு நகர்கிறார் வாடிக்கையாளர். ஒரே வாரத்தில் இந்த வீடியோவை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். பலர் ஷஃபாத்தின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்து, பாராட்டியிருக்கிறார்கள். சிலர், எத்தனையோ நவீன வழிகள் இருக்கும்போது தலையில் தீவைத்து முடிவெட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்கள். அதிக வெப்பம் ஆபத்து என்றும், ஆபத்தை விட நன்மையே அதிகம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த உமர் குவாரைஷி என்ற பத்திரிகையாளர் ஷஃபாத்தைச் சந்தித்தார். “உலகின் பல பகுதிகளிலும் நெருப்பை வைத்து முடி வெட்டும் வழக்கம் இருந்து வருகிறது. முடியை நேராக்குவதற்கும் பளபளப்பாக்குவதற்கும் நெருப்பைப் பயன்படுத்துவதாக ஷஃபாத் ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே தன்னுடைய பிரத்யேக முடிவெட்டும் நுட்பம் மூலம் பாகிஸ்தானில் பிரபலமாக இருக்கும் ஷஃபாத், இன்று உலக அளவில் பிரபலமாகிவிட்டார்” என்கிறார் உமர்.
எவ்வளவு தேர்ந்தவராக இருந்தாலும் நெருப்பால் முடிவெட்டுவது ஆபத்தானது!
அமெரிக்காவின் ஆர்லண்டோ நகர் காட்டர்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் இருக்கிறது வெள்ளை முதலை. குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் அல்பினிசம் எனப்படும் வெள்ளைத் தோல் நோய் உருவாகிறது. இது மரபணுக் குறைபாட்டு நோய். மனிதர்களில் இருந்து விலங்குகள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். தன் நிறத்தால் முத்து என்று அழைக்கப்படும் 10 வயது முதலை, ஏழரை அடி நீளமும் 48 கிலோ எடையும் கொண்டதாக இருக்கிறது. உடல் முழுவதும் வெண்மையும் கண்கள் இளஞ்சிவப்பாகவும் காட்சியளிக்கின்றன. “மூன்று வயதில் அல்பினோ முதலை இங்கு வந்தது. இந்த அதிசய முதலையைப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள்தான் முத்து என்று பெயரிட்டுள்ளனர். பத்து லட்சம் முதலைகளில் 3 முதலைகளுக்கு இந்த மரபணுக் குறைபாடு ஏற்படுகிறது. உலகெங்கும் முதலைகள் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன. கடத்தல்காரர்களிடமிருந்து முதலைகளை மீட்டு வருகிறோம். அப்படி மீட்கப்பட்ட முதலைகளில் ஒன்று இந்த அல்பினோ முதலை. இதே போல பினோ என்ற அல்பினோ முதலை பிரேசிலில் வசிக்கிறது. முதுகு, கால் வலியால் அவதிப்பட்ட இந்த முதலைக்கு அக்குபஞ்சர் மருத்துவம் அளிக்கப்பட்டது” என்கிறார் பூங்காவின் செய்தித் தொடர்பாளர்.
நோயால் நிறமிழந்த அபூர்வ முதலை!