குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்டு டிரம்புக்கு நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் ஆதரவு இல்லை என்பதை சமீபத்திய கருத்து கணிப்பு உணர்த்துவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிகிறது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் ஹிலாரிக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, வாஷிங்டன் போஸ்ட், ஏபிசி நியூஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நாட்டை வழிநடத்துவதற்கு டிரம்ப் தகுதியற்றவர் என 3-ல் ஒருவர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய வானொலிக்கு ஒபாமா அளித்த பேட்டியில் கூறும்போது, “நாட்டின் அதிபராவதற்கு அவருக்கு (டிரம்ப்) தகுதி இல்லை என்று 3-ல் ஒருவர் கூறியுள்ளனர். நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக அவர் பேசவில்லை. இதனாலேயே அவரை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கவில்லை” என்றார்.