ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் உமர் மன்சூர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர், 140 பள்ளி மாணவர்களை பலிகொண்ட பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணம், பந்தார் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதலை கடந்த சனிக்கிழமை நிகழ்த்தியது.
இந்த தாக்குதலில் பெஷாவர் பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட உமர் நரே மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் மற்றொரு முக்கியத் தளபதியான சயீஃபுல்லாவும் கொல்லப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் வந்துள்ளது என்றனர்
உமர் மன்சூர் கொல்லப்பட்ட தகவலை தலிபான்களோ, நடுநிலையான வட்டாரங்களோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள ராணுவப் பள்ளிக்குள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி புகுந்த தலிபான் பயங்கரவாதிகள்,அங்கிருந்த 144 பேரை படுகொலை செய்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள்.
இத்தாக்குதலை நடத்திய உமர் மன்சூரை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அறிவித்தது. அதன் மூலம், உமர் மன்சூர் தனது பயங்கரவாத நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தார். இந்நிலையில் உமர் கொல்லப்பட்டிருப்பது தலிபான்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.