தென்அமெரிக்க நாடான பெருவில் பருவநிலை மாற்றத்தால் வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. இதில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோரை காண வில்லை.
எல்நினோ எனப்படும் பருவ நிலை மாற்றத்தால் உலகின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பெரு நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது.
அங்கு கடந்த 1998-ம் ஆண்டில் இதேபோன்ற பெரு மழை பெய்தது. அதன்பிறகு பெரும்பாலும் வறட்சியே நீடித்தது. தற்போது தலைநகர் லிமா, பியூரா, லாம்பேகியூ, லா லிபர்டெட், அன்காஷ் ஆகிய பகுதிகளில் இடைவிடாது மழை பெய்கிறது.
மழை காரணமாக கடந்த சில நாட்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந் துள்ளன. பல ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளன.
குடிநீர், உணவு இன்றி லட்சக் கணக்கான மக்கள் பரிதவிக் கின்றனர். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பெரு நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.