அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய பொறியாளர், நிறுவனத்தின் முக்கிய வர்த்தக ரீதியிலான ரகசியங்களை திருடியதாக 18 மாத சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தியாரான கேத்தன்குமார் மணியர்(38) அமெரிக்காவின் பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான பெக்டான் டிக்கின்சன் மற்றும் நியூஜெர்ஸி மருத்துவ தொழிழ்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார். இதனிடையே பணியில் இருந்தபோது சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் வர்த்தக ரீதியிலான நிறுவன ரகசியங்களை திருடி மூன்றாவதாக மற்றொரு நிறுவனத்துக்கு வழங்க அவர் முயற்சி செய்ததாக டிக்கின்சன் மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு கேத்தன்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் கேத்தன்குமாருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேத்தன் மணியர் பிரபல மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான 'பார்ட்' என்ற நிறுவனத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். இதன் பின்னர் 'பெக்டான் டிக்கின்சன்' என்ற நிறுவனத்தில் பிப்ரவரி 2013-ஆம் ஆண்டு முதல் மே மாதம் 2013-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்திருக்கிறார்.
இவர் தான் பணிபுரிந்த 'பார்ட்' என்ற நிறுவனத்திலிருந்து பல முக்கிய கோப்புகளை கணினி சேமிப்பு உபகரணங்களிலிருந்து தனது தனிப்பட்ட இ-மெயில் கணக்குக்கு கேத்தன் அனுப்பிக்கொண்டுள்ளார். இதனை அடுத்து 'பெக்டான் டிக்கின்சன்' நிறுவனத்திலிருந்து இதே போன்ற முறையை கையாண்டுள்ளார்.
இந்த இரு நிறுவன பணியிலிருந்தும் கேத்தன் விலகும் போது, 8000-த்துக்கும் மேலான ரகசிய தகவல்களை தனது இ-மெயில் கணக்குக்கு அனுப்பி உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கூட்டுத்தாபன கோப்பு, நிறுவன வருவாய் கணக்கு, நிதி பரிவர்த்தணை, காப்புரிமை ரகசியம் போன்றவையும் கேத்தன் தனது இ-மெயிலில் திருடி வைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கோப்புகளாக மாற்றி, 'விண்ணப்பம்', 'கவர் கடிதம்', 'நன்றி கடிதம்' என்று சங்கேத வார்த்தைகளோடு கோப்புகளாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குற்றங்கள் அனைத்தும் அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தின் விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.