சிIங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மேலும் 3 இந்தியர்கள் விசாரணைக்காக ஒரு வார போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருப்பையா சந்திரசேகர்(31), பழனிவேல் தாஸ்மோகன்(27), ஆறு முகம் கார்த்திக் (24) ஆகியோர் மீது நீதிமன்றத்தில் சட்டவிரோதமாகக் கூடுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது.
தற்போது அவ்வழக்கு கலவரத்தில் ஈடுபடுதல் என்ற பிரிவில் மாற்றப்பட்டு, மூவரும் ஒரு வார போலீஸ் காவலில் விசாரிக்கப்படுகின்றனர்.
கருப்பையா சந்திரசேகர் மற்றும் பழனிவேல் தாஸ்மோகன் இருவரும் போலீஸார் மீது கான்கி ரீட் கட்டிகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆறுமுகம் கார்த்திக் ஐந்து நபர்களுடன் சேர்ந்து போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும், குப்பைத்தொட்டி, கான்கிரீட் கட்டி கள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மூர்த்தி கபில்தேவ் (24), சிவராமன் (36) இருவருக்கும் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் அவர்களால் வழக்கறிஞர் வைத்துக் கொள்ள முடியாவிட்டால், குற்ற சட்ட உதவித் திட்டத்தின் கீழ் அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்து தரப்படும் என வழக்கறிஞர் அமாரிக் கில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள 28 இந்தியர்கள் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதில் 2 பேர் வழக்கறிஞர்களை நியமித்துக் கொண்டுள்ளனர்.
முன்னதாக 33 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில், 7 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மேலும் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.