அமெரிக்கா தலைமையிலான சீன-எதிர்ப்புக் கூட்டணியில் இந்தியா சேர வாய்ப்பில்லை என்று சீன அரசுப் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-சீன நல்லுறவுக்கு மோடி தலைமையில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அது உலகம் முழுதும் பெரும் வெற்றிப் பயணமாக பேசப்பட்டு வரும் நிலையில் சீன அரசு தினசரியில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் கொண்ட அமெரிக்க தலைமை சீன-எதிர்ப்புக் கூட்டணியில் இந்தியா சேராது என்பதற்கான 3 காரணங்களை அந்தக் கட்டுரை அலசியுள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரிக்க ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை கூட்டணி சேர்த்துள்ளது. இது பெரும்பாலும் சீனாவுக்கு எதிரான போக்கே என்று கூறியுள்ள அந்தக் கட்டுரை, இந்தியா அணி சேரா நாடு என்ற பண்பாட்டில் வளர்ந்து வருவது எனவே இந்தியா ஒரு போதும் சீன-எதிர்ப்பு அமெரிக்க வியூகத்தில் இணையாது என்று அறுதியிடுகிறது அந்தப் பத்திரிகைக் கட்டுரை.
"இந்தியா பன்முக அயல்நாட்டுக் கொள்கையை அனுசரிப்பது, ஆகவே இந்தியா அமெரிக்காவுடனான உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதோ அதே அளவு சீனாவுடனான உறவுகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும்” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான ‘தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகள்’ இருந்தாலும் இந்திய-சீன உறவுகள் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்கிறது அந்தக் கட்டுரை.
ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஜப்பான், அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பெரூ, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கூட்டுறவுடன் அமைக்கப்பட்ட 'டிரான்ஸ்-பசிபிக் கூட்டுறவு' சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இந்தக் கூட்டணி அமைக்கப்படுவதில் இந்தியா பரிசீலிக்கப்படவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் பெரும்பாலும் இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டதே என்று அந்தக் கட்டுரை அறுதியிட்டுள்ளது.