உலகம்

சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை முஷாரப்

செய்திப்பிரிவு

முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச துரோக குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகவில்லை. விசாரணையில் ஆஜராவதிலிருந்து முஷாரப்புக்கு விலக்கு தரும்படியும் விசாரணையை 5 வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படியும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.

முஷாரப், அடுத்த விசாரணையில் ஆஜராகவேண்டும் என்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு பற்றிய திட்டத்தை காவல்துறை நீதிமன்றத்திடம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முஷாரப் தரப்பு வழக்கறிஞர் அகமது ரஸா கசூரி வாதிடுகையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் முஷாரப் விசாரணையில் ஆஜராகவில்லை. முஷாரப்பின் பண்ணை இல்லத்துக்கு அருகில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது நிலை மையை புரியவைக்கும். எமது கட்சிக்காரருக்கு ஏதாவது நேர்ந்தால் நீதித்துறைதான் பொறுப்பேற்கவேண்டிவரும்.

அரசமைப்புச்சட்டத்தை மீறி நவம்பர் 2007ல் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியதாகவும் நீதிபதிகளை சிறை வைத்ததா கவும் முஷாரப் குற்றம் சாட்டப்பட் டுள்ளார். இந்த வழக்கில் முஷாரப் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறை விதிக்கப்படலாம்.

பாகிஸ்தானில் விசாரணையை எதிர்கொண்டுள்ள முதல் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப். தன்னை பழிதீர்க்கவே தேச துரோக வழக்கு என விமர்சித்துள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப் விசாரிக்கப்படுவதை ராணுவம் விரும்பவில்லை என்று தெரிகிறது.

1999ல் நவாஸ் ஷெரீப் அரசை கலைத்து ஆட்சியில் அமர்ந்த முஷாரப். 2008ல் பதவியிலிருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். கடந்த மார்ச்சில் நாடு திரும்பி, மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் நிறைவேற வில்லை. முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கிலும் முஷாரப் சேர்க்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT