பேருந்து இருக்கைகளில் காலைத் தூக்கி வைத்துக் கொள்வது, புகைபிடிப்பது ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடைகளுடன் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் புதிய தடை ஒன்றும் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான போக்குவரத்து வாகனங்களில் கை, கால்களை கண்டபடி பரத்தியபடி அமர்ந்து அடுத்தவர் இடத்தையும் ஆக்ரமிக்கும் போக்கு ஸ்பெயினில் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இனி பேருந்து இருக்கைகளில் கண்டமேனிக்கு உட்காருவது தடை செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை முதல் இதற்கான தீவிர பிரச்சாரம் முளைத்துள்ளது, ஸ்டிக்கர்கள், போஸ்டர்கள் என்று கால்களை பரத்தாதே என்ற வாசகங்களுடன் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியுள்ளது. மேலும் “அடுத்தவர் இருக்கையை-இடத்தை மதியுங்கள்” என்ற வாசகமும் இதில் அடங்கும்.
மேட்ரிட் முனிசிபல் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த சுமார் 2,000 பேருந்துகளில் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டமேனிக்கு அடுத்தவர் இடம், இருக்கை என்று பாராமல் கை கால்களை பரத்தி உட்காருவதற்கு ‘மேன்ஸ்பிரெடிங்’ (Manspreading) என்று அங்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து மேட்ரிடைச் சேர்ந்த மெலிஸா கார்சியா கூறும்போது, “இவ்வாறு உட்காருவது கல்வியறிவின்மையினால் அல்ல, பெண்கள் கால்களை அடக்கி ஒடுக்கி உட்கார வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறார்கள், அதாவது பெண்கள் மட்டும் முழங்கால்களுக்குள் எதையோ வைத்திருப்பது போல் உட்கார வேண்டுமாம். ஆனால் ஆண்கள் மட்டும் கை கால்களைப் பரத்தி கண்டமேனிக்கு உட்காரலாமாம், இது என்ன விதி? எனவே இந்த தடை உத்தரவை வரவேற்கிறேன்” என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்தார்.