உலகம்

உக்ரைன் பிரச்சினை: ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஒபாமா ஆலோசனை

செய்திப்பிரிவு

உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவது குறித்து பிரிட்டன் பிரதமர், போலந்து அதிபர் மற்றும் ஜெர்மன் பிரதமர் அகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி அறிக்கையில்: ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாட்டுத் தலைவர்கள் பலர் ரஷ்யாவின் நடவடிக்கை, உக்ரைன் இறையாண்மையை அத்துமீறும் செயலாகும். மேலும், இது சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பும் குந்தகம் விளைவிக்கும் செயலாகும் என வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு கிரிமியா மாகாணத்தில் உள்ள செவாஸ்டோபோல் நகரில் ரஷ்ய கடற்படைத் தளமும் உள்ளது.

தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அதிபர் புதின் அதிரடியாக ராணுவ நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் தலைநகர் கீவில் உக்ரைன் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் களத்தில் குதிக்கும் என்று தெரிகிறது. இதனால் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் அத்துமீறல் குறித்து ஒபாமா, ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT