உலகம்

அமெரிக்கர்களுக்கு சவுதி பால் கறக்கும் பசு: ஈரான் கடும் விமர்சனம்

ஏஎஃப்பி

அமெரிக்கர்களுக்கு சவுதி 'பால் கறக்கும் பசு' என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முதல் சர்வதேச பயணமாக சவூதி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இதில் சவுதி மற்றும் அமெரிக்காவுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் சவுதி - அமெரிக்கா நட்புறவு குறித்து, ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா கொமேனி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ட்ரம்ப்பின் சவுதி பயணம் குறித்து அயதுல்லா கொமேனி கூறும்போது, "இவர்கள் (சவுதி) குரானின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் போல காணப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அதற்கு மாறாக நடந்து கொள்கிறார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை சவுதி 'பால் கறக்கும் பசு'- வைப் போன்றது. அவர்களது வேலை முடிந்துவிட்டால் இறைச்சியை வெட்டுவதைப் போல வெட்டி விடுவார்கள்" என்றார்.

ட்ரம்ப்பின் சவுதி பயணத்தின்போது, அமெரிக்காவிடமிருந்து 110 மில்லியன் டாலருக்கு ஆயுதங்கள் வாங்க சவுதி சம்மதம் தெரிவித்தது. மேலும் ட்ரம்ப் தனது முதல் சர்வதேச பயணத்தில் ஈரான் தீவிரவாதிகளுக்கு நிதி அளிக்கிறது. ஈரான் அணுஆயுதங்களை வைத்திருக்க அனுமதி அளிக்கக் கூடாது என்று ஈரானுக்கு எதிராக பல கருத்துகளைப் பேசி வந்தார்.

இதற்கு ஈரான் புதிய அதிபர் ஹசன் ரவ்ஹானி, "ட்ரம்ப்பின் பயணத்தில் எந்த அரசியல் சார்ந்த எந்த மதிப்பும் காணப்படவில்லை. எங்களுக்குத் தேவை ஏற்பட்டால் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்துவோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT