உலகம்

தென் கொரிய அதிபர் பதவி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்தது

ஏபி

தென்கொரிய அதிபர் பார்க் குவைன் ஹையை பதவியில் இருந்து நீக்கி, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அந்நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. இதையடுத்து விரைவில் அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிபர் பார்க் குவைன் ஹையின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந் தன. அதிபருடனான நெருக் கத்தைப் பயன்படுத்தி, போலி தொண்டு நிறுவனங்கள் பெய ரில் நிதி திரட்டியதாகவும், அரசுப் பணி நியமனங்களில் தலையிட் டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதி யில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஊழல் விவகாரங்களுக்கு பொறுப்பேற்று அதிபர் பார்க் குவைன் பதவி விலகக் கோரி அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. எனினும் அந்த குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்த பார்க், பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து பார்க் குவைன் ஹையை நீக்கும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது பொறுப்புகள் அனைத்தும் பிரதமர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் அதிபர் பதவியில் நீடிப்பதா, கூடாதா என்பதை முடிவு செய்யும் விதமாக தென்கொரியாவின் அரசமைப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி லீ ஜங் மீ கூறும்போது, ‘‘அரசமைப்பு சட்ட விதிகளை மீறி செயல்படுவது பொதுமக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போல் ஆகும். இதன் காரணமாகவே அதிபரை பதவியில் இருந்தும் நீக்கும் தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்குகிறது’’ என்றார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் உயிரிழந்தனர். தென் கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க்குக்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருப்பது அவருக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே எதிரி நாடான வடகொரியாவிடம் இருந்து தொடர் அச்சுறுத்தல்களைத் தென்கொரியா சந்தித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அந்நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. தென்கொரியாவின் சட்டப்படி அடுத்த 2 மாதங்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் 2012 தேர்தலில் பார்க்கிடம் தோல்வி அடைந்த மூன் ஜே இன்னுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் நடக்கவுள்ள தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT