உலகம்

வன்முறையின்போது “லத்தி” பயன்படுத்த சிங்கப்பூர் போலீஸாருக்கு பரிந்துரை

செய்திப்பிரிவு

வன்முறை போராட்டங்களின் போது இந்தியாவில் பயன்படுத்துவதுபோல் “லத்தி” பயன்படுத்த சிங்கப்பூர் போலீஸாருக்கு விசாரணைக் குழு பரிந்துரைத்தது.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக விசாரணைக் குழுவை அரசு நியமித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.பன்னீர் செல்வம் தலைமையிலான இக்குழுவினர் கலவரம் தொடர்பாக பொது விசாரணை நடத்தினர்.

அப்போது, கலவர இடத்துக்கு முதலில் வந்த போலீஸார் வன்முறையை எவ்வாறு கையாண்டனர் என்று விசாரணைக் குழுவிடம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜொனாதன் டாங் விளக்கினார். அப்போது விசாரணைக்குழு தலைவர் பன்னீர் செல்வம், “உங்களிடம் துப்பாக்கி இருந்தாலும் அதை பயன்படுத்தக் கூடாது. இந்த நேரத்தில் லத்திதான் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வன்முறை நடைபெறும் இடத்துக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் துப்பாக்கியுடன் மட்டும் செல்லக்கூடாது” என்று கூறினார்.

மிகவும் நெருக்கத்தில் இருக்கும் வன்முறையாளர் களுக்கு எதிராகவும், அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் போலீஸார் “t” வடிவ கைத்தடிகளை பயன் படுத்துவதாக டாங் கூறினார். இதற்கு பன்னீர் செல்வம், அண்மையில் இந்தியாவில் நாடாளுமன்றம் எதிரே நடந்த போராட்டத்தை போலீஸார் லத்தி உதவியுடன் திறம்பட கையாண்டதை, நாளேடுகளில் படங்களுடன் வெளியான செய்தியை காட்டி விளக்கினார்.

சிங்கப்பூர் போலீஸாரின் பயன்பாட்டுக்காக லத்தி கொள்முதல் செய்யுமாறு காவல்துறை உதவி ஆணையர் டி.ராஜகுமாரிடம் பன்னீர் செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT